Sunday, December 9, 2007

திருக்குறள் - மெய்பொருள் விளக்கம்

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"

இந்த குறளுக்கான மெய்பொருள் விளக்கம்,

உலகப் பொருள்கள் மீது பற்றுள்ள வரையிலும் மெய்ப்பொருளான இறைநிலையை உணர முடியாது. பிறப்பு இறப்பு எனும் வாழ்க்கைக் கடலை கடக்க முடியாது. உடல், உயிர், சீவகாந்தம் மூன்றும் கூடிய சீவனின் உடலுக்கு பிறப்பு முதல் இறப்பு வரையில் பெரும்பாலும் துன்ப அனுபவங்களாகவே இருக்கின்றது. இந்த உண்மையை ஒரு பேரறிஞர் தொகுத்துக் கூறியிருக்கிறார் ஒரு கவியின் மூலம்

வேதநூல் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினைந்தாண்டு
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்பு துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமாநருளானே

இது ஒரு பக்திப் பாடலாக இருந்த போதிலும் மனித வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை விளக்கிக் கூறுகிறது.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"

என்ற குறளில் இறைநிலையுணர்வும் பொருள்கள் மீது பற்று விட்டு மனம் தூய்மை பெற வேண்டியதும் ஒன்றிணைந்து பேறாக உணர்த்தப்பட்டுள்ளன.

இறைநிலையை அதன் பேரியக்கச் சிறப்புகளை அதன் வியத்தகு விளைவுகளை ஐயமின்றி ஒருவர் உணர்ந்து கொண்ட பின்னர்தான் உலகப் பொருட்கள் மீது உள்ள பற்றுக்கள் நீங்கும். பிறவிக் கடலையும் கடக்க முடியும். பொருள் பற்று உடையவர்கள் அடிக்கடி உலகப் பொருட்கள், மக்கள், புலன் இன்பம் இவற்றை நினைந்து நினைந்து மனதை அவற்றிலேயே ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு நினைவும் அவர் கருமையத்தில் வினைப்பதிவாகி அது அடிக்கடி மூளை செல்கள் மூலம் அவ்வப்போது எண்ணங்களாக மலர்ந்து கொண்டிருக்கும் இதனால் மனம் களங்கப்பட்டுக்கொண்டே இருக்கும். இக்களங்கமே இறைநி்லையை உணர முடியாத தடையாக அமையும். இதனை அழுகணி சித்தர் ஒரு கவியின் மூலம் விளக்குவதை உணர்வோம்.

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமை மறித்து நகை புரியப் பார்ப்பரன்றோ
நாட்டார் நம்மை மறித்து நகை புரியப் பார்த்தாலும்
காட்டனை மேலேறி என் கண்ணம்மா
கண் குளிரப் பாரேனோ

காட்டான் என்றால் உருவமற்றவன் தன் இருப்பை உணரக் காட்டிக்க் கொள்ளாதவன் என்பதாகும். இத்தகிய காட்டான் எனும் உருவமற்ற நிலை பேரியக்க மண்டலம் முழுவதிலும் நிறைந்து இறைவன்(இறைவெளி) ஆகவும், ஒவ்வொரு சீவனிலும் அறிவாகவும் இருக்கிறது. எனவ்வே காட்டான் என்ற சொல் அறிவையும் குறிக்கும். இறைவனையும் குறிக்கும்.

காட்டன் எனும் அறிவானது பேரியக்க மண்டல தத்துவங்களில் பஞ்ச பூதங்களாக உள்ள நிலம், நீர், வெப்பம், காற்று, விண் என்ற ஐந்து நிலைகளையும் தாண்டி இவற்றிற்குப் பிறப்பிடமாகவுள்ள பரம்பொருளை உணர்ந்து அதனோடு இணைய முயலும்போது எனது வாழ்க்கையில் நான் பற்று கொண்டு அனுபவித்த வினைப்பதிவுகள் எல்லாம் எண்ணங்களாக அடுத்தடுத்து தோன்றுகின்றன. இந்த நிகழ்ச்சி எப்படியிருக்கின்றதென்றால் எனது வினைப் பதிவுகளிலிருந்து எழும் எண்ணங்கள் என்னை நோக்கி நீ எங்களையெல்லாம் தாண்டிப் போய் கடை நிலையாகவுள்ள பரம்பொருளை உணர்ந்து கொள்ள முடியுமா என்று தடுத்து நிறுத்தி என்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போல் உள்ளது. எப்படியாயினும் எனக்கு உறுதியிருக்கிறது. வினைப்பதிவுகள் என்ற தடைகளை வினைத்தூய்மை, மனத்தூய்மை இவற்றால் நீக்கிகொண்டு என் அறிவைக் கொண்டே இறைவனை அடைவேன் என்ற கருத்தே இக்கவி. உலகப் பொருட்கள் மீது உள்ள பற்றுக்கள் எவ்வாறு இறைநிலையுணரும் பேற்றைத் தடுக்கின்றது என்பதை விளக்குவதற்கே உவமையாக இந்த அழுகணி சித்தர் பாடலை நினைவு படுத்தியுள்ளேன்.

மறை பொருட்களை உணரத் தக்க ஆறாவது அறிவோடு வாழும் உயர்ந்த பிறவியை பெற்ற மனிதனுடைய பிறவியின் நோக்கம் மிக உயர்ந்ததாகும். அது இறை நிலையான மெய்ப்பொருளை உணர்ந்து அறிவின் முழுமையைப்பெற்ற, பிறப்பு இறப்புத் தொடரை அறுத்து விட வேண்டுமென்பதேயாகும். பொருள் பற்றுப் பதிவுகள் அடிக்கடி ஒருவருக்கு எழுந்தால் மனமானது அந்தப் பொருளை அடிக்கடி நினைந்து நினைந்து அதை அடைவதற்கும் அனுபவிப்பதற்கும் தனது ஆற்றலை வாழ்நாள் முழுவதும் செலவிட வேண்டி இருக்கிறது. இதனால் இறைநிலையை நாடுவதற்கும் அதனை உணர்வதற்கும் வாய்ப்பு கிட்டுவதில்லை. எனவே இறைநிலையை உணர்வதற்கும் பிறவிக் கடலை நீந்துவதற்கும் பொருள் பற்றை நீக்கி மனத்தூய்மை பெற வேண்டும். இந்த உயர்ந்தப் பேற்றினை பெறுவதற்கு ஒருவர் தானாக் முயன்றால் அந்நிலை கிட்டுவது அரிது. ஏனெனில் அத்தகைய அறிவின் முழுமைப்பேறு போதனை முறை, சாதனை முறை இரண்டும் இணைந்ததாகும். எனவே இந்த உயர்ந்த அறிவு நிலையைப் பெற அறிவில் முழுமை பெற்று பற்று நீங்கிய ஒரு வழிகாட்டியான ஞானாசிரியர் துணை வேண்டும். எனவே முறையாகப் பயின்று பற்று விட்டு வாழும் ஒரு ஞானாசிரியரைப் பற்ற வேண்டும். இந்த நுட்பத்தை உணர்த்துவதே இந்த குறளில் முதற் பகுதில் வரும் "பற்றுக பற்றற்றான் பற்றினை" என்பதாகும்.

வினைப்பயனாகத் தொடர்ந்து வரும் பிறவிக் கடலை நீந்த வேண்டும் என்ற பெருநோக்கம்கொண்ட இறை வேட்பாளருக்கு ஞானாசிரியர் தரும் ஒரு நாள் போதனையால் மட்டும் பற்று விட்டு மனம் தூய்மை அடைந்து விடும் என்று கருத முடியாது. பற்று நீக்குவது போதனை முறை மட்டுமல்ல. சாதனையும் வேண்டும். ஞானாசிரியர் உடனிருந்து அவர் வாழ்க்கை முறையினைப் பின்பற்றி நடந்து பயிலவேண்டும். அத்தகைய நிறைவான அறிவு நிலையைப் பெறும் வரையிலும் ஞானாசிரியர் தொடர்பை விட்டு நீங்காமல் அவரை பற்றி நின்று பயன் காண வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார் குறளாசிரியர். இக்குறளின் கடைப் பகுதியான "அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" என்று, நீ முழுமை பெற்று உனது பொருள் பற்று நீங்கி இறையுணர்வு பெற்று வெற்றியடையும் வரையில் ஞானாசிரியரை பற்றி நில் என்பதே இக்குறளின் பொருள்.

Friday, November 23, 2007

தீபத்திருநாள்

திருவண்ணாமலை வாசிகளுக்கு தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.

தீபத்திருநாள் கொண்டாடப்பட கதை ஒன்றை எல்லோரும் சொல்வர். அது நம் முன்னோர் செய்து சென்ற சூட்சும ஏற்பாடு. அதில் மிகச்சிறந்த அறிவியலே ஒளிந்திருக்கின்றது.

பொதுவாக தீபத்திருநாள் கொண்டாடப்படும் கார்த்திகை மாதத்தில் முன்னரெல்லாம் (5 ஆண்டுகளுக்கு முன்பு கூட) அதிகமாக புயல்கள் உருவாகி வட கிழக்கு பருவமழை தமிழகத்தை பதம் பார்க்கும். அதன் காரணமாக வெள்ள அபாயம் எப்பொழுதும் தமிழகத்தில் இருந்துகொண்டே இருக்கு.

இதிலிருந்து காக்க மன்னர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் எல்லோரும் ஆலோசித்தனர். அதன் காரணத்தை அறிவியல் ரீதியாக அணுகி ஒரு தீர்வு கண்டனர். அதாவது புயல் உருவாவதற்கு காரணம் கடலில் ஏற்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். அதை சரி செய்ய நாட்டின் உயரமான இடங்களில் சூடு படுத்த வேண்டும். அதனால் அந்த இடங்களில் வெப்பம் காரணமாக காற்று சூடாகி விரிவு பெரும். இது தொடர்ச்சியாக நடைபெறுவதால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சமன் செய்யப்பட்டு புயல் அபாயம் நீங்கும். ஆனால் மழை மட்டும் பொழிந்துகொண்டிருக்கும். அதனால் கார்த்திகை தீபத்திருவிழா வடிவமைக்கப்பட்டு தொடர்ச்சியாக தீபத் திருநாளில் இருந்து 15 நாட்களுக்கு நாட்டின் உயரமான பகுதிகளில் எல்லா வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டு புயல் சமன் செய்யப்படுகின்றது. அதன் பிறகு மழை பொழிவு சீரடைந்து புயல் அபாயம் நீங்குகின்றது.

Friday, October 5, 2007

உருவ வழிபாடு

உடல் நலம் அறிவோடு செல்வம் கீர்த்தி
ஒழுக்கம் வீரம் அழகு காதல் ஞானம்
கடமை உணர்வினை பெற்று இனிது வாழ
கற்பனையால் கருத்துயத்த நினைத்த முன்னோர்
உடல்நலம் முதலான ஆற்றலெல்லாம்
ஒன்றிணைத்து உர்வமைத்த் நம்புதற்கு
கடவுள் கதைகள் பலவும் கற்பித்தார்கள்
கருத்துயர்ந்தோர்க்கிச்சடங்கு தேவையில்லை.

நிறைவாக அமைதியோடு வெற்றி கண்டு வாழ
நில உலகில் மக்களிடம் அன்பு காட்ட வேண்டும்
குறைகாணும் பழக்கத்தை விட்டு விட்டு நல்ல
குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்
உறைவிடமும் உணவும், பால் உறவும் மதிப்போடு
உழைத்துப் பெற்றளவு முறையோடு துய்க்க வேண்டும்
மறைபொருளாம் மெய்ப்பொருளை அறிய அருட்குருவை
மதித்து தவம் அறம் கற்று, பற்றி வாழ வேண்டும்.

ஆலய வழிபாடு

தெய்வத்தை போற்றி வழிபட்டு வாழ்வோர்
சிந்தனையும் மேற்கொண்டால் சிறந்துயர்வார்
ஐயுணர்வும் சீர்திருந்தும் ஆற்றல் ஓங்கி
அவர் தகமை ந்ன்குணர்வர் அறம் தழைக்கும்.

சிலை வணக்கத்தின் எல்லை

இறைநிலையே அறிவாக இருக்கும் போது
இவ்வறிவை சிலை வடிவத்தெல்லை கட்டி
குறைபோக்கக் பொருள் புகழ் செல்வாக்கு வேண்டி
கும்பிட்டுப் பலன் கண்ட வரையில்போதும்;
நிறைநிலைக்கு அறிவு விரிந்துண்மை காண
நேர்வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று
முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேற
முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டாம்.

பயிற்சியில் இருவகை

புலனளவில் அன்ன மயம் ப்ராணமய கோசப்
போக்கினிலே மயக்குற்ற்ச் செயலாற்றி வாழும்
சலன நிலையுடையோர்கள் தங்கள் மனம் ஒன்ற
சார்பொருள்கள் உருவம் ஒலி இரண்டிலொன்று வேண்டும்
பலனறிந்து செயலாற்றும் பண்பு பெற்றோர்கட்கு
பரத்தினிலே உயிர் உயிரில் அறிவு லயமாக
நலறிந்த பேரறிஞர் அகநொக்கி நின்று
ஞானப் பேறடைந்த வழி உள்ளுணர்வுத் தவமே.

ஆலயம் - சொல் விளக்கம்

ஆலயமென்றால் அறிவு ஓர்மை நிலை பெற்று
ஆன்மாவெனும் உயிரில் அடக்கமுறும் பேறாம்.
ஆலயமெனும் சொல்லில் 'ஆ' ஆன்மாவாகும்
அடுத்துவரும் 'லயம்' அதனின் அட்க்க நிலைக் குறிப்பு
ஆலயமாம் பயிற்சி முறை தேர்ந்தாற்றிப் பழக
அறிவு உயிரை உணரும் மெய்ப் பொருளாம்
ஆலயத்தால் மனிதன் அறவழி கண்டு வாழ்வான்
அதற்கறிவின் தரமொக்க இருவழிகள் உண்டு.

Saturday, September 29, 2007

கற்பகம்

கற்பு + அகம் என்ற சொற்களின் இணைப்புத்தான் கற்பகம்.இங்கு ஆன்மா உயிர்வரையில் உணர்ந்து விரிந்து ஆற்றுகின்ற தகுதி பெற்ற நிலை. இச்சித்து இச்சித்து, துய்த்துத் துய்த்து சலிப்பும், துன்பமும் பெற்ற ஆன்மா சிந்தனையில் ஆழ்கின்றது. புற இயக்கம் விடுத்து தன்னடக்கம் உண்டாகி உயிர் நிலையின் சிறப்பை அறிகின்றது. அறிவைப் படர்க்கை ஆற்றலாகவே அறிந்து கொள்கிறது. விளைவறிந்து செயலாற்றுகின்ற தகைமை ஓங்குகிறது. செய்யத்தக்கன, தகாதன இவற்றை விளங்கி, விளக்க வழியில் தன் தேவை,பழக்கம் இவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ளுகிறது. இந்த அளவில் அறிவு உறுதி பெற்ற போது ஒழுங்கும் இயல்பாகின்றது. உறுதியும் ஒழுக்கமும் பெற்ர ஆன்மாவின் அந்த மதிப்புள்ள உயர்நிலை தான் கற்பு + அகம். அகம் என்றால் உள்ளம். கற்பு எனில் உறுதியும் ஒழுக்கமும் பெற்ற நிலை. இது ஆன்மாவின் வளர்ச்சி நிலையில் இரண்டாவது கட்டம்.

காமதேனு

தேனு என்பது பசு. ஆன்மீக உலகில் பசு என்கிற சொல் ஆன்மாவை குறிக்கும். காமம் என்பது இச்சையைக் குறிக்கும் சொல். காமதேனு எனில் இச்சையை இயல்பாக உடைய ஆன்மா என்று பொருள். உடல் வரையில் எல்லை கட்டி புலன்கள் வழியே புறப்பொருள் கவர்ச்சியால் ஈர்க்கப்பெற்று ஆன்மா செயல் புரிகின்ற போது விளைவுகள் பெரும்பாலும் சலிப்பும் துன்பமும் தரும். இவ்வகையில் இச்சைக்கே ஆன்மாவின் ஆற்றல் பயன்படுகின்ற முதல் கட்டம் காமதேனு.

Thursday, September 6, 2007

உறவுகள் மேம்பட

குடும்பத்திலும் சரி அலுவகத்திலும் சரி யாழிலும் சரி,மனித உறவுகள் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும்,ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமலும் இருக்க


நானே பெரியவன் , நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்

எந்த விஷயத்தையும் , பிரச்சனையும் கையாளுங்கள்

சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்து ஆகவேண்டும் என்று உணருங்கள்

நீங்கள் சொன்னதே சரி , செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்

குறுகிய மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள்

மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி கர்வப்படாதீர்கள்

அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய் ஆசைபடாதீர்கள்

எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்க்ள்

கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்

உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்

மற்றக் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்

புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுப் போல் நடந்து கொள்ளாதீர்கள்

பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் , தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்

பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்