பிறவித்தொடர் அறுப்போம்
உலகில் மனிதப்பிறப்பு உயரியபிறப்பு. ஆனால், பிறப்பின் நோக்கம்? நாம் மீண்டும் மீண்டும் பிறப்பதற்கல்ல. நாம் நமது பரம்பரை வழியாக(இதுவே ஜென்மங்கள்/பிறவிகள் ஏனெனில் நாம் ஜீன் மூலமாக நமது முன்னோரின் தன்மைகளை பெற்றிருக்கின்றோம்) மற்றும் பிறப்பிற்கு பிறகு 12 வயதுக்கு பின்னர் செய்யக்கூடிய பாவங்களையெல்லாம் கரைத்து(பிராயச்சித்தங்கள், புண்ணியபதிவுகள் மூலம்) அதற்கான பலன்களை அனுபவித்து கரைத்து எல்லா பாவங்களையும் போக்கியபின்னர் மரணமில்லாப்பெருவாழ்வு(முக்தி) அடைவதே வாழ்வின் லட்சியமாகும். இவற்றை கரைக்க பெரிதும் உதவியாக இருக்கக்கூடிய மிக நம்பகமான மற்றும் வேகமான வழிமுறையே தவம்/யோகம் ஆகும்.
பக்தி பாதையிலும் பாவங்களை விரதம்/யாத்திரைகள் மூலமாக கரைத்துக்கொள்ள முடியும். ஆனால் அதற்கு மிக நீண்டகாலம் பிடிக்கும். மேலும் அந்த அளவிற்கு நமக்கு ஆயுள்நீட்டிப்பு வேண்டும். மேலும் புதிய பாவங்களை பழக்கத்தின் காரணமாக சேர்த்துக்கொள்ளாத மனவலிமை வேண்டும். இல்லையென்றால் பாவக்கணக்கு நேராக ஆக ஒரு பக்கம் கூடிக்கொண்டே இருக்கும். இதனால் பாவக்கணக்கு கரையும் வேகம் குறைவாகவே இருக்கும்.
ஆனால் யோக மார்க்கம் வேகமாக கரைத்துக்கொள்ள வழிகாட்டுவதுடன் புதிதாக பாவங்களை சேர்த்துக்கொள்ளாமலிருக்க பழக்கங்களை மாற்றியமைக்கும் மனவலிமையையும் கொடுப்பதால், இருக்கின்ற பாவங்களை மட்டும் கரைத்தால் போதுமென்ற சுதந்திரத்தையும் கொடுக்கும்.
கடலிலிருந்து ஆவியாகும் நீர் பல படிமுறைகளை வழிகளை கடந்து மீண்டும் கடலை அடைவது போல சிவத்திடம் தோன்றிய நாம் மீண்டும் சிவத்தை அடைவதே நமது நோக்கமாக கொண்டிருத்தல்வேண்டும்.
பிறவித்தொடர் அறுக்கும் பொருட்டுதான் பட்டினத்தார் அவர்களும் இறைவனிடம் இப்படி வேண்டுகிறார்
"இறைவா எனக்கு மேலும் மேலும் தண்டனைகளையே கொடுத்து எல்லா பாவங்களையும் கரைத்து நீக்கிக்கொள்ள உதவு" என்று.
மேலும் சனீஸ்வரர் ஒருவருடைய தசையில் வருகின்றார் என்றாலே அவர்கள் மிகவும் பயந்து விடுவார். அவர் தொடர்ச்சியாக சோதனைகளையே தருவார் என்று. ஆனால் அவர் மானிட வாழ்விற்கு மிகவும் உதவியாகவே இருக்கின்றார். அவர் ஒவ்வொருவருடைய பாவக்கணக்கையும் கடும் தண்டனைகளையும், சோதனைகளையும் கொடுப்பதன் மூலம் நீக்கிவிடுகின்றார். அவர் நம்முடைய ஜாதகத்திலிருந்து நீங்கும்போது நம்மை நமது பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியே விலகுகின்றார். அதனால் அவர் நம்முடைய தசைக்கு வருகின்றார் என்றால் நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும் அவருடைய காந்த அலைக்கதிர்கள் (இவையே ஒவ்வொரு பாவப்பதிவுகளையும் ஒவ்வொரு மனிதனின் கருமையத்திலிருந்து எடுத்து அதற்கு பலனாக மனக்குழப்பங்களையும் தகுந்த விளைவுகளையும் கொடுக்கிறது) நமக்கு நன்மையே செய்யவேண்டும் என்று தினந்தோறும் சங்கல்பம் செய்வதன் மூலம் அவற்றை நல்லமுறையிலே உபயோகித்துக்கொள்ளலாம். விரைவில் பாவப்பதிவுகள் அகலும்போது அவர் நமக்கு அளவில்லா நன்மைகளை செய்வதை நாம் கண்கூடாக பார்க்கலாம். ஆனால் இந்த மனநிலை, மனவலிமை எவ்வளவு பேருக்கு சாத்தியமாகும்? இதனை யோகக்கலை ஒருவருக்கு எளிதாக்கி கொடுக்கிறது. மனவலிமையை அதிகரித்து தண்டனைகளை ஏற்றுக்கொள்ள மனப்பக்குவம் கொடுக்கிறது.