மானிடர்க்கு கற்பு அவசியமா?
உடலியக்கத்தால் தேவையுணர்வும், தேவையுணர்வாலும் சந்தர்ப்பங்களினாலும் பழக்கமும், பழக்கத்தினால் தொடர்ந்து தேவைகளும், இவைகளினால் அறிவின் வளர்ச்சியும் பெற்று வாழ்ந்து வரும் மனிதர்கள், உண்மையாகவும் அறிவின் மயக்கத்தில் சில வகையில் கற்பனையாகவும் இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவிக்கின்றார்கள். இவற்றில் பசி, நோய் என்ற இருவகை உணர்ச்சிகள் மாத்திரம் உண்மையான துன்பங்களாகும்.
நோய்கள் பலவகைப்பட்டவை. அவற்றில் மேகம் என்பது மிகக் கொடியது. இது வித்துவை முதலில் பற்றி பிறகு சப்ததாதுக்களிலும் பரவும். உடலையும் உள்ளத்தையும் சீர்குலைத்து, பொருளாதாரத்தை பாதித்து, பாரம்பரியமாக சந்ததிகளையும் பாதித்து, சமுதாயத்திலும் தொடர்ந்து பரவி, நீண்ட காலத்திற்கு மனித இன வாழ்வில் துன்பத்தைக் கொடுக்க வல்லது. ஆண் பெண் உடலுறவு இன்ப அனுபோகத்தில் அளவு மீறிய, முறை மாறிய ஒழுங்கீனத்திலிருந்து இந்த நோய் தோன்றுகிறது.
பூரண பக்குவமாகாத வயதிலோ, அளவு மீறியோ, வழக்கமாக உடல் உறவு நட்பு இல்லாத வேறு ஒருவருடன் நீண்ட இடைக்காலமில்லாமலோ, மனம் ஒவ்வாதவருடனோ, வயதிலே மிக அதிகமான ஏற்றத்தாழ்வுடையவருடனோ அண்/பெண் உடலுறவு கொள்வதால் இந்த நோய் ஆரம்பமாகிறது.
ஆண் பெண் இருபாலரும் கருவை பாதிக்கத்தக்க ஆகாரம், மருந்து இவைகளை கொள்வதாலும், வித்து விளைந்து அளவுக்கு அதிகரித்து அது வெளியேற்ற வேகம் கொண்டு இருந்தும் அதை பலாத்காரத்தினாலோ, அறியாமையாலோ, வசதியின்மையாலோ, நீண்டகாலத்திற்குத் தடுத்து வைத்திருப்பதாலும் இந்த நோய் உண்டாகலாம்.
வித்து பூரணமாகிவிட்டால் அது சிந்தனை சக்தியாக மீதம் மாறியும், வெளியேறியும் சம நிலையடைவதே முறையான இயக்கம். அணுவில் ஆரம்பித்து அணுக்கூட்டு சிறு வட்ட இயக்கம், பெருவட்ட இயக்கம் உடலவயங்கள் அனைத்திலும் முன்னோக்கிச் சென்று தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுவரும் கபாட இயக்கம்(Volve Action), வித்து என்ற தாதுவில் நடைபெறும் சரியான பாதை இது. இது திசைமாறி இரத்தத்திலும் மாமிசத்திலும் பின்னோக்கிக் கலந்து நிற்பதுதான் மேகவியாதி எனப்படும்.
ஒரு முட்டையிலே வெள்ளைக் கரு, மஞ்சள் கரு என இரண்டும் இருக்கின்றன அல்லவா? சிறிது சிறிதாக முறைப்படி வெண்கரு மஞ்சள் கருவில் லயமாகிக்கொண்டே இருந்தால் அது குஞ்சு ஆகிவிடும். இதுவே முறையான கபாட இயக்கம். மஞ்சள் கரு உடைந்து வெள்ளையில் கலந்தால் அந்த கரு கெட்டு விடுகின்றது. இதுவே முறை தவறிய இயக்கம். இதுபோலவே ரத்தம் வித்துவில் சிறுகச் சிறுகக் கலந்து விந்துவைப் பக்குவப்படுத்தியும் விந்தாக மாறியும் கொண்டிருப்பதற்கு பதில், வித்து வெப்பம் மீறி உடைந்து கலங்கி அதன் வேகம் பின்னோக்கி நிற்பதே மேகமாய் ஆகும்.
இந்நோய் ஒரு தடவை ஏற்பட்டுவிட்டால், அதை மருந்தாலோ, அப்பியாசங்களினாலோ, போக்கிக்கொண்ட போதும், அது பின்னர் ஒரு சிறு சந்தர்ப்பங்கிடைத்தாலும் அவ்வுடலில் பரவ ஆரம்பித்துவிடும். இந்நோய் பற்றி நிற்கும் ஒருவருடன் உடல் உறவு கொள்ளும் ஆண் பெண் அனைவரையும் அது நிச்சயமாக தொடரும். சந்ததிகளையும் விடாது பற்றி நிற்கும்.
இந்நோயிலிருந்து க்ஷயம், காசம், பௌத்திரம், மூலம், குன்மம், பைத்தியம், புற்றுநோய் இவைகளும் தோன்றலாம். உடல் முழுவதும் சருமத்தைப் பற்றி பரவிவிடும்போது இதுவே குஷ்டரோகமாகின்றது. வேறு பல சூழ்நிலைகளால் இந்நோய் உடலில் பரவாது மறைந்து இருந்தபோதும், பிற்கால சந்ததிகளில் யாருக்கு அது அதிகரித்துக் காட்ட சூழ்நிலைகள் ஏற்படுமோ அப்போது அந்நோய் வேகமாகப் பரவிவிடும்.
முற்காலத்திய சுகாதார விஞ்ஞான மனோதத்துவ நிபுணர்கள், இவையெல்லாம் நன்குணர்ந்தே கற்பொழுக்கம் என்ற ஆண்-பெண் உடல் நட்புறவு ஒழுக்க முறைகளை வகுத்துள்ளார்கள். பருவம் அடையாத வயதுடையவர்கள், காம இச்சையை தூண்டும் அல்லது கற்பு ஒழுக்கத்தை அலட்சியப்படுத்தும் கதைகளைப் படிப்பதாலும், அத்தகைய நாடகப் படக்காட்சிகளைப் பார்ப்பதாலும் பருவம் வந்தவர்கள் காலா காலத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதாலும் இருபாலருக்கும் முறையற்ற உள்ளக் கிளர்ச்சியும் உடல் கனலும் ஏற்படுகின்றன. இதன் விளைவாக கற்பு ஒழுக்கத்தில் தவறுதல் ஏற்படுகின்றது.
உடல்கூறு சாத்திர அறிவோ, அனுபவமோ, ஆழ்ந்து சிந்திக்கும் திறனோ இல்லாத சிலர், தங்கள் இளம் வயதில் சந்தர்ப்பங்களினால் கற்பொழுக்கத்தில் தவறி, அச்சமயத்தில் கண்ட ஒரு இன்பத்தை மாத்திரம் பெரிதென எண்ணி இருப்பதும் உண்டு. அவர்களுக்கு இளம் வயது காரணமாக இதன் விளைவுகள் தெரியாவிட்டாலும், இரத்த ஓட்ட வேகத்தின் திருப்ப எல்லையாகிய 45 வயதிற்கு மேல் இந்த மேகவியாதி வெளிப்படையாகத் தெரியும்.
இந்த உண்மைகளையறியாத சில மயக்கவாதிகள் கற்பொழுக்கம் என்பது கேலிக்கூத்து எனப்பேசி, பாலுணர்ச்சியைத் தூண்டி பொதுமக்கள் உள்ளங்களை குறிப்பாக இளைஞர் உள்ளங்களைக் கெடுத்து, கற்பு ஒழுக்கத்தில் தவறி நடக்க வேகமூட்டும் வகையில் கதைகள் பல எழுதுகின்றார்கள். சினிமாப் பாடல்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்கள்.
கலைஞர், அறிஞர், கவிஞர், நாவலர், பண்டிதர், படாதிபதி, பேச்சாளர், எழுத்தாளர் என்ற புனிதமான பெயர்களில் இந்தத் தவறான சமுதாய நல விரோத செயல்களைச் செய்து வருகின்றார்கள். அதன் மூலம் பணம், புகழ், அதிகாரம், அந்தஸ்து என்றவைகளைப் பெற்றும் மகிழ்கின்றார்கள். ஆராயும் திறமையும் கல்வியறிவும் இல்லா மக்களிடையே இச்செயல்கள் மறுமலர்ச்சி என்றும் சீர்திருத்தம் என்றும் கூட துணிந்து கூறுகின்றார்கள்.
வேதாத்திரி மகரிஷி